யோகா பயில ‘யோகம்‘ செய்திருக்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. அவ்வாக்கிற்கேற்ப மகிழ்ச்சியான இன்பமயமான வாழ்க்கை வாழ யோகா வழிசெய்கிறது. முறையான அசைவுகள் நடனம் ஆகின்றது; முறையான ஓசை இசை ஆகிறது; முறையான சொற்கள் கவிதை ஆகும். அவைபோல மனிதனின் முறையான வாழ்க்கையே வரலாறாகிறது. அந்த முறையான வாழ்க்கை வாழ பயிற்சி அளிக்கும் பட்டறையே யோகக் கல்வியாகும்.
நாம் வாழும் சமுதாயத்தில் உள்ள மக்களிடம் முன்பு இருந்ததைவிட பொருளாதார வசதி மேம்பட்டுள்ளது இவ்வளர்ச்சியானது மக்களின் பொருளீட்டும் அறிவு மேம்பட்டுள்ளதை விளக்குகிறது. அதேபோல் விஞ்ஞானக் கருவிகளின் வளர்ச்சியானது மக்களிடம் விஞ்ஞான அறிவு பெருகி உள்ளதையே காட்டுகிறது. ஆனால் இன்று வாழும் மக்களிடம் உடல் மற்றும் மன நோய்கள் முன்பைவிட பெருகியுள்ளன; மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் பெருகியுள்ளது, இவ்வளர்ச்சியானது மக்களிடம் உடல் மற்றும் மன நலனைக்காக்கும் அறிவு குறைவாக உள்ளதையே காட்டுகிறது. நமது கல்வித் திட்டத்தில் இருந்து விடுபட்ட இந்த உடல் மற்றும் மனநலம் காக்கும் அறிவினை யோகக் கல்வி வழங்குகிறது.
தற்பொழுது நாட்டில் குற்றங்கள் பெருகியுள்ளன, மக்களிடம் போட்டியும் அமைதியின்மையும் காணப்படுகிறது. கல்வி அறிவில் மேம்பாடு அடைந்த சமூகம் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கி இருக்க வேண்டும் அல்லவா? இதற்கு காரணம் ஒழுக்க கல்வி எனப்படும் நன்னெறிக்கல்வி நமது பாடத்திட்டத்திலிருந்து விடுபட்டதே ஆகும், அக்குறையை போக்க ஒவ்வொரு மனிதனுக்கும் யோகக் கல்வி அவசியமாகிறது.
ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு அவசியமோ அதே போல மனிதனின் வளர்ச்சிக்கு உடல் மற்றும் மன நலன் அவசியமாகிறது.
‘Sound mind is Sound body
Sound body is Sound mind.’
என்ற விவேகானந்தரின் வரிகளுக்கு ஏற்ப நல்ல உடலில் தான் சிறந்த எண்ணங்களை கொண்ட மனிதன் உருவாக முடியும்.
‘ உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்,
உடல் வளர்த்தேனே.. உயிர் வளர்த்தேனே.. ‘
என்று திருமூலரும் நலமாக உள்ள உடலில் தான் உயிர், நீண்ட நாள் தங்கி, நீண்ட ஆயுளுடன் வாழமுடியும் என்பதை விளக்குகிறார். யோகப் பயிற்சிகளால் மனிதனின் உடல், உயிர், மனநலம் மேம்படுவதுடன் சமுதாயத்துடனும், இயற்கையுடனும் இணைந்து ஒத்து வாழ வழி ஏற்படுகிறது. இதனால் மனிதன் ஒரு நிறைவான வாழ்க்கை வாழ யோகக் கல்வி கட்டாயமாக அமைகிறது.
இக்கால சமுதாயத்தில் மனிதர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள், இது பல உடல் நோய்களுக்கு காரணமாக அமைகிறது யோகப் பயிற்சிகள் மனதில் உள்ள அழுக்குகளையும் எதிர்மறை எண்ணங்களையும் அகற்றி மனிதனை உண்மையான சுதந்திரத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது. இன்றைய நவீன மருத்துவத்தால் முழுமையாக தீர்க்க முடியாத மன அழுத்தம் இரத்த அழுத்தம் தலைவலி முதுகுவலி ஒவ்வாமை ஆஸ்துமா போன்ற பல நோய்கள் தீர யோகப் பயிற்சிகள் வழி செய்கின்றன.
யோகா என்றால் இணைதல் என்று பொருள். எந்த சக்தி கோள்களையும் நட்சத்திரங்களையும் இயக்குகிறதோ, எந்த சக்தி இப்பூவுலகை இயக்குகிறதோ, எந்த சக்தி விதையை விருட்சமாக வளரச் செய்கிறதோ, எந்த சக்தி உலகிலுள்ள அனைத்து உயிருக்குள்ளும் இருந்து இயங்கி வழிநடத்துகிறதோ, அந்த தெய்வீக சக்தியோடு இணைப்பை ஏற்படுத்தி அதன் வழிகாட்டுதலின்படி வாழ யோகா வழி செய்கிறது. ஆதலால் இன்றைய உலகின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாக யோகப்பயிற்சிகள் அமைந்து மனிதனை மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் ஏற்புத்தன்மையுடனும் வாழ நமக்கு கிடைத்த அற்புத பரிசு யோகா என்றால் மிகையாகாது.
எனவே உலக மக்கள் அனைவரும் சாதி, மத, இன பேதமின்றி யோகக் கல்வியைப் பயின்று ஆரோக்கியத்துடனும் உடல் நலத்துடனும் வாழ முயல்வோம்.